மிலாது நபியையொட்டி மதுக்கடைகள் மூடப்படாமல் காலையில் புதுச்சேரி, காரைக்காலில் திறக்கப்பட்டிருந்தது. எதிர்ப்புக் கிளம்பியதால் திடீரென்று மதியம் மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டது. அவ்வுத்தரவில் மாலையில் கடைகளைத் திறக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்த விநோதம் நிகழ்ந்தது.
புதுவை அரசின் கலால்துறை காந்தி ஜெயந்தி, வள்ளலார் தினம், மகாவீர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மிலாது நபி ஆகிய நாட்களில் மதுக்கடைகளைத் திறக்கத் தடை விதித்துள்ளது.
மிலாது நபி பண்டிகையான இன்று (அக். 30), புதுவையில் அனைத்து மதுக்கடைகளும், மதுபார்களும் வழக்கம்போல திறக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரித்தபோது, மிலாது நபிக்குக் கடைகளைத் திறக்கலாம் எனத் தலைமைச் செயலாளர், துறை அமைச்சருக்குக் கோப்பு அனுப்பியிருந்தார். ஆனால், அமைச்சர் நமச்சிவாயம் மதரீதியான பண்டிகை என்பதால் வழக்கம்போல மதுக்கடைகளை அடைக்க உத்தரவிடும்படி தெரிவித்தார். ஆனால், மதுக்கடைகளைத் திறக்க கலால்துறை அனுமதித்தது.
இதனால் புதுவையில் மதுபானக் கடைகள், சாராயக்கடைகள், பார்கள் வழக்கம்போல திறக்கப்பட்டன. பலரும் மதுபானங்களை வாங்கிச்சென்றனர். ஆனால், திடீரென்று கடைகளை அடைக்க மதியம் மறு உத்தரவினை கலால்துறை பிறப்பித்தது.
இந்நிலையில், மதியம் ஒரு மணிக்கு திடீரென மதுபானக் கடைகள் மூடப்பட்டன. மதுபானக் கடைகளை அடைக்கச்சொல்லி உத்தரவு வந்திருப்பதாகக்கூறிய ஊழியர்கள் அவசர அவசரமாக கடைகளை அடைத்தனர். வாடிக்கையாளர்களை வெளியே விரட்டினர். கலால்துறை அறிவிப்பில் மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கலால்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "வழக்கமாக மதுபானக் கடைகள், பார்கள் மிலாது நபி தினத்தன்று அடைப்பது வழக்கம். கடைகளைத் திறக்கலாம் என கலால்துறை உத்தரவு பிறப்பித்தது. அதில் சர்ச்சை எழுந்ததால் திடீரென்று மதியம் கடைகளை மூடச்சொல்லி உத்தரவிட்டது. அதுவும் வழக்கமான உத்தரவுப்படி மாலை ஆறு மணி வரை என்று குறிப்பிட்டு உத்தரவிட்டிருந்தனர்" என்று தெரிவித்தனர்.