தமிழகம்

பொழுதுபோக்கு அம்சங்கள் உணவில் உப்புபோல் இருக்கட்டும்; அறிவுபரப்பும் சாதனமாக ஊடகங்கள் மாறட்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சினிமா, விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு செய்திகளை உணவில் உப்புபோல பயன்படுத்தி, இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் செய்திகளுக்கும், தகவல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்குமாறு ஊடகங்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“மும்பை திரையுலக நடிகர் சுசாந்த் சிங் என்பவரின் மரணம் குறித்து வட இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அளவுக்கு மீறி செய்திகளை கூறுவதுபற்றியும், ஊடகங்கள் தகவல்களை வெளியிடுவது பற்றியும் கருத்துக் கூறுமாறு மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இச்செய்தியின் பின்னணி - அதாவது கடந்த நான்கு மாதங்களுக்குமேல் வட இந்திய தொலைக்காட்சிகள் குறிப்பாக ஓர் ஆங்கில வழி தொலைக்காட்சி, சதா சர்வ காலமும், பொழுது விடிந்து பொழுது போனால் இந்நடிகரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதுபற்றிய செய்திகள் - அது எந்த அளவிற்குக் கொண்டு செல்லப்பட்டது என்றால், இரண்டு மாநிலங்களுக்கு இடையில் பரஸ்பர விரோதம் உண்டாக்கும் அளவிற்கு.

பரபரப்புச் செய்தி, டி.ஆர்.பி. ரேட்டிங் (T.R.B. Rating) என்ற இலக்கு, இவற்றை மனதிற்கொண்டு, மக்களின் கவனத்தை நாட்டின் முக்கிய பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதாகவே அமைந்துள்ளது - மிகப்பெரிய தேசியக் குற்றம் ஆகும். கசப்பான செய்திகளை மக்கள் மன்றத்தின்முன் வைக்க விரும்புகிறோம்.

அபூர்வ சிந்தனைக்குப் பஞ்சமோ பஞ்சம்

மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினை, நாட்டில் பெருகிவருகிற வேலை கிட்டாத தன்மை, அதன் காரணமாக இளைஞர்களின் விரக்தி, இளைஞர்கள் தவறான - தீய வழிகளில் ஈடுபடும் சமூக விரோதச் செயல்பாடுகள் - இவை நாளும் மலிந்து வருவதுபற்றி அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கோ, ஏழை, எளிய மக்களுக்கு இந்த கரோனா (கோவிட் 19) தொற்று அபாய காலத்து பொருளாதார சீர்கேட்டிலிருந்து மீளும் வழிமுறைகள் - உடல்நலம், பொது சுகாதாரம்பற்றிய பொது அறிவுப் பெருக்கம் - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் (Educating the Public) போன்றவற்றிற்குரிய முக்கியத்துவமோ கொடுக்க நாட்டின் ஊடகங்கள் பெரிதும் தவறிவிட்டன.

ஆக்கப்பூர்வ சிந்தனைகளுக்கு ‘பஞ்சமோ பஞ்சம்.’ ஒரு தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட அம்சம் தலைப்பு என்றால், அதையே ‘காப்பி’ அடிப்பதுபோல் மற்றொரு நேரத்தில் அதுபற்றியே விவாதம்.

சினிமா - விளையாட்டு - உணவுக்கு உப்புபோல் இருக்கவேண்டும்

சினிமா, பொழுதுபோக்கு, விளையாட்டு என்பது முக்கியம்தான் - எந்த அளவில்? பொழுதுபோக்கு அம்சத்தில், உணவுக்குப் போடும் உப்பு போன்று இருக்கவேண்டும். ஆனால், நமது நாட்டு தொலைக்காட்சிகளின் அன்றாட நிகழ்ச்சிகளை அலசி ஆராய்ந்தால், பெரிதும் திரைப்பட போதைதான். அதுவும் தங்கள் கைவசம் உள்ள படைப்பாற்றல் திறமைபற்றி ஏனோ அவர்கள் முழுமையான பயன்பாட்டைத் தருவதில்லை.

கொலை, கொள்ளை, குற்றம்பற்றிய விரிவான விளக்கம் - புதிது புதிதாக அந்த வழிமுறைகளை பல சீரியல்களே கற்றுத் தருவதாக அமைவது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.

ஒரே ஆண்டில் நான்கு பெண்களுக்கு நோபல் பரிசு - பற்பல துறைகளில் கிடைத்திருக்கும் அளவுக்கு மகளிரின் ஆற்றல் - வெளியாகி, சனாதன மனுமாந் தாதாக்களை வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது. அந்த அறிவியல் சாதனை வீராங்கனைகளைப்பற்றிய விவரம் வெளிச்சம் போட்டு நம் தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறதா?

அறிவியல் செய்திகள் எங்கே?

சிறப்பான வரலாற்று நிகழ்வு நாள் என்றால், தொலைக்காட்சியில் சினிமா முக்கியத்துவம் தவிர, அதன் வரலாறு உண்டா? ஊரை, உலகைத் திருத்திய உத்தமர்கள் வரலாறு பற்றிய அறிவார்ந்த பல செய்திகள் தவிர்க்கப்படுகின்றனவே. ஜோதிடம், இராசி பலன், மூடநம்பிக்கைத் திருவிழாக்களின் இடையறாத நேரடி ஒளிபரப்பு - இவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளாக (Fundamental Duties) உள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதா? அழிப்பதா?
விவாதங்கள்கூட பல நேரங்களில் ஊடக முதலாளிகளின் விருப்பத்திற்கேற்பத்தான் அமைக்கப்படுகின்றனவே தவிர, அறிவியல் அடிப்படையில், பொது நிலையோடு தரப்படுவதில்லையே.

ஊடகங்கள் - பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என்பவை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற நிலையில், எத்தகைய அறிவுபரப்பும் சாதனமாக இருக்கவேண்டும்?

பொருளாதாரம்பற்றி சாதாரண தொழிலாளியும்கூட புரிந்து கொள்ளும் எளிய முறையில், அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள்பற்றி - அதுவும் இதுபோன்ற சோதனையான காலகட்டத்தில் சொல்லிக் கொடுக்கப்படலாம்!
பொழுதுபோக்கு - கேளிக்கை அம்சம் வாழ்க்கைக்குத் தேவைதான் - அதுவே எந்நேரமும், எல்லாமும் என்றால், அது போதையே தவிர வேறு என்ன?

சிந்தனையாளர்கள் குழு அமைக்கலாமே

பொது அறிஞர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், புதுமையான ஆக்கங்களை உருவாக்கும் சிந்தனையாளர்கள் அடங்கிய குழுவாக அமைக்கலாமே. இந்த ஆதரவு (T.R.B. Rating) விளம்பர வருவாய் மோகம் - இவற்றையே முன்னிலைப்படுத்தி, ஆளுவோருக்கு அச்சப்பட்டு பல செய்திகளை சார்பு நிலையில் சாயம்பூசி தருவது போன்ற போக்குகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அச்சமற்ற, சுதந்திரமான கருத்துகள் வெளிவரும் சூழலும் உருவாக்கப்படவேண்டும். எது முன்னால், எது பின்னால் என்பதைப்பற்றி விவாதம் வேண்டாம் - யாராவது முதலில் தொடங்கவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT