மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுப்பையா சண்முகத்தின் மீது கூறப்படும் புகாரில் உண்மை இருந்தால் மறுபரிசீலனை செய்வது நல்லது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கையோ, ஆலோசனையோ வழங்கவில்லை.
ஆளுநரின் முடிவென்பது தாமதமாகும் நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் அரசாணை வெளியிட்டார்.
இதனால், ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என மு.க.ஸ்டாலின் குறை சொல்கிறார்.
தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆனால் நீடித்த நிலைத்து நின்ற கட்சிகளாக அதிமுகவும் திமுகவும் இருக்கின்றன. இந்தத் தேர்தல் வந்தாலும் போட்டி என்பது எங்களுக்குள் தான். அதில் வெற்றி பெறும் இயக்கமாக அதிமுக உள்ளது.
எங்களுக்கு மற்ற கட்சிகளைப் பற்றியும் கவலை இல்லை. எத்தனை போட்டிகள் வந்தாலும் எத்தனை கட்சிகள் வந்தாலும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறப்போவது அதிமுக தான்.
மதுரையில் வரவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களை நியமிப்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.
தற்போது நிர்வாகக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுப்பையா சண்முகத்தின் மீது கூறப்படும் புகாரில் உண்மை இருந்தால் மறுபரிசீலனை செய்வது நல்லது" என்றார்.