தமிழகம்

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்ற சுவாமி விக்ரகங்கள் குமரி வந்தன: களியக்காவிளை எல்லையில் பாரம்பரிய வரவேற்பு

எல்.மோகன்

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்காக சென்றிருந்த சுவாமி விக்ரகங்கள் இன்று குமரி மாவட்டம் வந்தடைந்தன. பாரம்பரிய முறைப்படி சுவாமி சிலைகளுக்கு களியக்காவிளை எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்படும் சுவாமி விக்ரகங்கள் பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் பங்கேற்பது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் வாகனங்களில் சுவாமி விக்ரகங்களை கொண்டு செல்ல முதலில் தமிழக, கேரளா இந்து அறநிலையத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சமூக இடைவெளியுடன் யானை, குதிரை ஊர்வலமின்றி வழக்கமான பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்ரகங்கள், உடைவாள் பவனிக்கு அனுமதிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து கடந்த 14-ம் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரகட்டு சரஸ்வதி, வேளிமலை முருகன் ஆகிய சுவாமிகள் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சிக்கு பின்பு ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றன.

பின்னர் 16-ம் தேதி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை சுவாமி சிலைகள் அடைந்தன. அதைத்தொடர்ந்து தேவாரக்கட்டு சரஸ்வதி விக்ரகம் திருவனந்தபுரம் கோட்டைக்ககம் கொலு மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரியசாலை சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோயிலிலும் நவராத்திரி பூஜையில் வைக்கப்பட்டன.

நவராத்திரி பூஜைகள் முடிந்த நிலையில் சுவாமி விக்ரகங்கள் மறுபடியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புறப்படும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் சந்திப்பில் இதற்கான வழியனுப்பு விழா நேற்று நடைபெற்றது. இரவில் நெய்யாற்றின்கரையை வந்தடைந்த சுவாமி சிலைகள், இன்று காலை குமரி, கேரள எல்லையான களியக்காவிளை வந்தடைந்தன.

அங்கு சுவாமி சிலைகளுக்கு பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து படந்தாலுமூடு வழியாக குழித்துறை மகாதேவர் ஆலயத்தை மாலை சுவாமி விக்ரகங்கள் அடைந்தது. அங்கு தங்கவைக்கப்பட்ட சுவாமி சிலைகள் நாளை (30-ம் தேதி) காலை புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை அடையவுள்ளது.

அதன் பின்னர் தேவாரகட்டு சரஸ்வதி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகங்கள் அந்தந்த கோயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

SCROLL FOR NEXT