எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரான சுப்பையா நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தென் மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளில் இருவரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இணைத்துப் புதிய அறிவிக்கை வெளியிட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“மதுரை அருகில் தொப்பூரில் அமையும் அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வு மைய மருத்துவமனைக்கான இயக்குநர் குழுவை மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமையத்தின் தலைவர் டாக்டர் கடோஜ் தலைமையில் 17 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவில் மக்கள் பிரதிநிதிகள் (நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர்) ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல.
அதேசமயம் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டவரும், குறிப்பாக 62 வயது மூதாட்டியின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து இழிவுபடுத்தியவருமான டாக்டர் சண்முகம் சுப்பையா குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இவர் ஆளும் பாஜகவின் மாணவர் பிரிவுத் தலைவர் என்பது மட்டுமே தகுதியாகிவிடாது.
எனவே, இவரது நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதுடன், தென் மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளில் இருவரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இணைத்துப் புதிய அறிவிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.