தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி ஆணையர் ஏ.ஜஹாங்கீர் பாஷா கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இதுகுறித்து இன்று (அக். 29) அவர் கூறியதாவது:
"புதுக்கோட்டை நகராட்சியில் வடகிழக்குப் பருவமழையின்போது டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் 400 பணியாளர்களைக் கொண்டு சுழற்சி முறையில் லார்வா கொசுப்புழு உருவாகாத வகையில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் 80 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிநீர் விநியோகம் செய்யப்படும் குடிநீர்த் தொட்டிகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. குப்பை, கழிவுநீர் தேங்காத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், இப்பணிகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இத்தகைய தருணத்தில் காய்ச்சிய நீரைப் பருகுதல், சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாக வைத்திருப்பது உள்ளிட்ட அரசு கூறும் வழிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், நகரில் ஒரு குளத்தில் நிரம்பிய மழை நீர் அடுத்தடுத்த குளங்களுக்குச் சென்று இறுதியாக காட்டாறு மூலம் வெளியேறும் வகையில் மன்னர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட 33 குளங்கள் மற்றும் அவற்றுக்கான வாய்க்கால்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கனமழை பெய்யும்போது தாழ்வான பகுதியில் மழை நீர் சூழாமல் இருக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் அனைத்துக் குளங்களையும் முழு அளவில் நிரப்புவதற்குத் தேவையான முன்னேற்பாடு பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன".
இவ்வாறு நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா தெரிவித்தார்.