தமிழகம்

எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் மருத்துவர் சண்முகம் சுப்பையா நியமனத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினராக சண்முகம் சுப்பையா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் ரூ.1200 கோடி செலவில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது.

இதற்கு தற்போது தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்கள் குழுவில், டாக்டர் சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் காசிநாதன், மாநில காங்கிரஸ் தகவல் அறியும் குழு இணைச் செயலளர் சத்தியன் சிவன். மாவட்ட தலைவர் நவீன் குமார் உள்ளிட்ட 20 பேர் டாக்டர் சண்முகம் சுப்பையா கொடும்பாவியை எரித்தனர். மருத்துவர் சுப்பைய நியமனத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

கொடும்பாவி எரித்த காங்கிரஸ் கட்சியினர் மீது ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர்கள் குழுவில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயய்யன், மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர், இயக்குனர், கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் காமேஷ்வரர் பிரசாத், ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் பங்கஜ் ராகவ், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் பேராசிரியர் டாக்டர் வனஜாக்‌ஷம்மா, ஆக்ரா சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் பிரசாந்த் லாவண்யா, சென்னை கே.எம்.சி.மருத்துவ கல்லூரியின் தலைமை பேராசிரியர் டாக்டர் சண்முகம் சுப்பையா உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT