தகுதி உள்ளவர்கள் தான் எய்ம்ஸ் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாகக் குழு உறுப்பினராக ஏபிவிபி ச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை மத்திய அரசு நியமனம் செய்ததற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மதுரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று, மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம்.கடோச் என்பவரை நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
மேலும், உறுப்பினர்கள் குழுவில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயய்யன், மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர், இயக்குனர், கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் காமேஷ்வரர் பிரசாத், ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் பங்கஜ் ராகவ், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் பேராசிரியர் டாக்டர் வனஜாக்ஷம்மா, ஆக்ரா சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் பிரசாந்த் லாவண்யா, சென்னை கே.எம்.சி.மருத்துவ கல்லூரியின் தலைமை பேராசிரியர் டாக்டர் சண்முகம் சுப்பையா உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், டாக்டர் சண்முகம் சுப்பையா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என அவரது நியமனத்துக்கு எதிராக குரல்கள் வலுத்துவருகின்றன.
இந்நிலையில், இன்று காலை மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மதுரை அதிமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுகையில், "எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தில் யாரை நியமித்து உள்ளார்கள் என்பதை ஆராய வேண்டி அவசியம் அதிமுகவுக்கு இல்லை. மத்திய அரசு, உறுப்பினர்களை நியமிக்ககும்போதே ஆராய்ந்து தான் நியமித்து இருக்கின்றது. தகுதியானவர்களை தான் நியமித்திருக்கிறார்கள். அதில் அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் நல்ல அனுபவத்தைப் பெற்றவர்கள். போதிய மருத்துவக் கல்வி அனுபவம் கொண்டவர்கள்," எனத் தெரிவித்துள்ளார்.