சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம் 
தமிழகம்

கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

டி.செல்வகுமார்

கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்த சாருமதி கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இப்பதவிக்குத் தகுதி வாய்ந்த நபரை நியமிக்க தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அப்பட்டியலில், எனது பெயர் மூன்றாவதாகவும், பூர்ணசந்திரனின் பெயர் ஆறாவதாகவும் இடம் பெற்றிருந்தது. எனது பெயருக்கு முன் உள்ள இருவர், விரைவில் ஓய்வு பெற உள்ளதால், தமிழக அரசாணையின்படி என்னைத்தான் கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவிக்கு நியமித்திருக்க வேண்டும்.

ஆனால், அப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள பூர்ணசந்திரனை இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கீதா கோரியிருந்தார்.

நீதிபதி வி.பார்த்திபன் இன்று (அக். 29) இவ்வழக்கை விசாரித்து, கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்தார். மேலும், தமிழக அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கல்லூரிக் கல்வி இயக்குநர் தேர்வு நடைமுறைகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT