திருச்சி உறையூரைச் சேர்ந்த முருகேசன் (40), கடந்த 30 ஆண்டு களாக பழைய புத்தகங்களுடன் வாழ்ந்து வருகிறார்.
5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த முருகேசனின் வீடு முழுவதும் பழைய புத்தகங்களால் நிரம்பி வழிகிறது. தன்னுடைய மோட்டார் சைக்கிளிலும் டெலிவரிக்கு தயாராக கட்டுக் கட்டாகப் புத்தகங்கள்.
திருச்சியைப் பொறுத்தவரை அரசு வேலைக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர் களிடையே இவர் மிகவும் பிரபலம். எப்போதும் பழைய புத்தகங்களுடன் சுற்றும் இவரை ‘ஓல்டு புக்’ முருகேசன் என்றே அழைக்கின்றனர். ஒரு போன் செய்தால் போதும் என்ன புத்தகம் வேண்டும் என்பதே இவரது முதல் கேள்வியாக இருக்கும். புத்தகத்தின் தலைப்பு அல்லது எழுதியவரின் பெயரை சொன்னால் போதும், கேட்பவர் படிக்கும் பயிற்சி மையம் அல்லது வீட்டில் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்.
மாவட்ட நலப்பணி நிதிக்குழு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி மையங்கள், தனியார் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் இவரைப் பார்க்கலாம். டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி, பேங்க், எம்பிஏ, கேட், சிமேட், ஜிஆர்இ, டெட் உட்பட எந்த தேர்வாக இருந்தாலும் அதற்குரிய பழைய புத்தகங்கள் இவரிடம் இருக்கும். டிஎன்பிஎஸ்சி மற்றும் டெட் தேர்வுகளுக்கென 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிப் பாடப் புத்தகங்களை செட்டாக தரு கிறார். இவை ஒன்று ரூ.30-க்கு கிடைக்கிறது. இன்ஜினீயரிங், மெடிக்கல், எம்பிஏ., தொடர்பான புத்தகங்களில் புதியது ரூ.500 என்றால் இவரிடம் ரூ.150-க்கு கிடைக்கும்.
பழைய புத்தகங்களைச் சேகரிக்க விடுமுறை நாட்களில் திருச்சி சுற்று வட்டாரப் பகுதி மற்றும் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மதுரை, கரூர் போன்ற மாவட்டங்களுக்கும் மொத்தமாக வாங்க வேண்டுமெனில் சென்னை, பெங்களூருவுக்கும் சென்று வருகிறார்.
இதுகுறித்து முருகேசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: “பிறந்த அன்றைக்கே அம்மாவை இழந்தேன். நான்கு வயதில் அப்பாவும் இறந்துவிட, என்னை தாய்மாமா சிங்காரவேலுதான் வளர்த்தார். 5-ம் வகுப்புக்கு மேல் படிப்பு ஏறவில்லை. அப்போது பெரிய கடை வீதியில் என்னுடைய மாமா வைத்திருந்த பழைய புத்தகக் கடையே எனக்கான உலகமாக மாறியது.
சரிவர படிக்கத் தெரியா விட்டாலும், புத்தகங்களுடன் பழகிப் பழகியே எனக்கு காமிக்ஸ், நாவல் புத்தகங்கள் முதல் இன்றைக்கு அரசுப் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள் வரை அனைத்தும் அத்துப்படி.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தனியாக பழைய புத்தகங்கள் வாங்கி விற்க ஆரம்பித்தேன். பின்னர், போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கென பழைய புத்தகங்களைச் சேகரித்து விற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சைக்கிளில் சென்றுவந்தேன். தற்போது தேவை அதிகம் இருப்பதாலும், நேரத்தை குறைக்கவும் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துகிறேன் என்றார் முருகேசன்.
எனது வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் உள்ளது
“நான் படிக்காததை நினைத்து இப்போதும் வருந்தாத நாளில்லை. ஆனாலும், படிப்பவர்களுக்கு ஒரு பாலமாக இருப்பதில் மனம் திருப்தியடைகிறது. என்னிடம் புத்தகம் வாங்கி படித்தவர்களில் பலர் கலெக்டர், தாசில்தார், பதிவாளர், நீதிமன்றம், கருவூலம் போன்ற அலுவலகங்களில் அரசு வேலையில் இருப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கும். அவர்களில் சிலர் என்னைப் பார்க்கும்போது மறக்காமல் வண்டியை நிறுத்திவிட்டு நலம் விசாரித்துவிட்டு செல்வார்கள். அப்போது, நம்முடைய வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன்” என்றார்.