தமிழகத்தில் மிக அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடும் பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு சின்ன வெங்காயம் பயிரில் மகசூல் இழப்பு, போதிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மாநிலத்திலேயே மிக அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது.
சின்ன வெங்காயம் பயிருக்கு ஏற்ற தட்பவெப்பநிலை, 3 மாத குறுகிய காலத்தில் மகசூல் கிடைப்பது ஆகிய காரணங்களால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர்.
நிகழாண்டு திருகல் நோய் தாக்குதலால் பல இடங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிச் சந்தையில் கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்கப்படும் சின்ன வெங்காயத்தை இம்மாவட்ட விவசாயிகளிடம் ரூ.50-க்கு கொள்முதல் செய்வதற்குக் கூட யாரும் இல்லை.
இதுகுறித்து, நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமார்(45) கூறியதாவது:
ஆடி, ஆவணி பட்டத்தில் விதைத்த வெங்காயம் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அறுவடைக்கு வரும். சித்திரை, ஆடி, ஐப்பசி என மூன்று பட்டங்களில் இப்பகுதியில் சின்ன வெங்காயம் விளைவிக்கப்படுகிறது.
இதில், ஆடிப் பட்டம் தவிர இதர பட்டங்களில் விளையும் வெங்காயத்துக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காவிட்டால் பட்டறையில் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்வது வழக்கம்.
ஆனால், ஆடிப் பட்டத்தில் விளைந்த வெங்காயத்தை பட்டறையில் சேமித்து வைத்தால் ஈரப்பதமான தட்பவெப்பநிலை காரணமாக பெரும்பாலான வெங்காயம் அழுகி சேதமடைந்துவிடும். இறுதியில், 25 சதவீதம் கூட தேறாது. பட்டறையில் வெங்காயத்தை சேமித்து வைத்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காது என்பதை உணர்ந்த வியாபாரிகள், மிகவும் குறைந்த விலைக்கு வெங்காயத்தை கேட்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இடைத்தரகர்களும், வியாபாரிகளும் நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். 3 மாதம் பாடுபட்டு விளைவித்த விவசாயிகளான எங்களுக்கு பெரிதாக லாபம் எதுவும் கிடைப்பதில்லை.
இதுபோன்ற விலை அதிகரிக்கும் நாட்களில் அரசே விவசாயிகளிடம் நேரடியாக வெங்காயத்தை நியாயமான விலையில் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள், நடமாடும் நியாயவிலை அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் அது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.