7 மாத காலத்துக்குப் பின்னர் ஏற்காட்டுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டதால், மலைக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் கடந்த 7 மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு தளர்வில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல தளர்வுகள் வழங்கப்பட்டன. ஆனால், ஏற்காடு உள்ளிட்ட கோடை வாழிடங்களுக்கு சென்று வர இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.
இந்த நடைமுறையால் கடந்த 7 மாதத்துக்கும் மேலாக ஏற்காட்டுக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. இதனால், ஏற்காடு மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 67 மலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவம், அலுவலகப் பணி என பல்வேறு தேவைகளுக்கும் ஏற்காடு மற்றும் சேலத்துக்கு வந்து செல்ல முடியாத நிலையிருந்தது.
இந்நிலையில், ஏற்காட்டைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஏற்காட்டுக்கு பேருந்துகளை இயக்கக் கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, 7 மாதங்களுக்குப் பின்னர் நேற்று முதல் சேலத்தில் இருந்து ஏற்காடு மற்றும் ஏற்காட்டில் இருந்து மலைக் கிராமங்களுக்கு முதல்கட்டமாக 3 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, ‘உள்ளூர் மக்களின் அடிப்படை நலன்கருதி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனினும், பிற தனியார் வாகனங்கள் ஏற்காடு சென்று வர இ-பாஸ் பெற வேண்டும் என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் உள்ளது” என்றனர்.
அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “முதல்கட்டமாக 3 பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பயணிகள் தேவைக்கேற்ப பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றனர்.
ஏற்காடு மற்றும் சேர்வராயன் மலைக் கிராம மக்கள் கூறும்போது, “நகரங்களில் கூட, பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், ஏற்காட்டுக்கு பேருந்து வசதி இல்லாமல் இருந்தது வேதனையளித்தது. தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டதால், எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.