வானதி சீனிவாசன் 
தமிழகம்

பாஜக தேசிய மகளிரணித் தலைவராக தமிழகத்தின் வானதி சீனிவாசன் நியமனம்

செய்திப்பிரிவு

பாஜக தேசிய மகளிரணித் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்ட செய்தியில், “தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசனை பாஜக தேசிய மகளிரணித் தலைவராக கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நியமித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

1980-ல் பாஜக தொடங்கியது முதல் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்காவது அகில இந்திய அளவில் பொறுப்புகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த மாதம் பாஜக தேசிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டபோது அதில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி

இதனால் 39 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய மாநிலத்தை பாஜக புறக்கணித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஜக தேசிய மகளிரணித் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில துணைத் தலைவராக இருக்கும் வானதி சீனிவாசன் இதன் மூலம் தேசிய அரசியலில் நுழைகிறார்.

50 வயதான வானதி சீனிவாசன், 1970 ஜூன் 6-ம் தேதி கோவை மாவட்டம், உளியம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் படிக்கும்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) இணைந்தார்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பி.எல். படிக்கும்போது ஏபிவிபி மாநிலச் செயலாளரானார். வானதியின் கணவர் சீனிவாசன் ஏபிவிபியில் மாநிலச் செயலாளராக இருந்தவர். தற்போது விஸ்வ இந்து பரிஷத் மாநிலத் தலைவராக இருக்கிறார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அரசியல் ஆர்வம் காரணமாக ஏபிவிபியில் இருந்து பாஜகவில் இணைந்த அவர், மாநிலச் செயலாளர், மாநிலப் பொதுச்செயலாளர், மாநில துணைத் தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.

SCROLL FOR NEXT