தமிழகம்

நடிகர் சங்கத் தேர்தல்: சரத்குமார், விஜயகுமார் வேட்புமனு தாக்கல் - நாசர் அணிக்கு கமல் ஆதரவு

செய்திப்பிரிவு

நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமாரும், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஜயகுமாரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட உள்ளன. இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமாரும், அவரது அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஜயகுமாரும் நேற்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு சரத்குமார் அணியில் போட்டியிடும் விஜயகுமார், நடிகர் தியாகு, நடிகர் கே.ராஜன் உட்பட ஏராளமான நடிகர்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சிவாஜி கணேசனின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அவரது சிலைக்கும் மாலை அணிவித்தனர்.

கமல் ஆதரவு

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமை யிலான அணியினர் நேற்று கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு திரட்டினர். அப்போது அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் உறுதியளித்தார்.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று மாலை நாசர் தலைமையிலான அணியினர் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயரை முன்மொழிந்து தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT