செல்வபுரம், ஆலத்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடைகளில் இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் படம். 
தமிழகம்

பயணிகள் நிழற்குடையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் படத்தை அகற்றக் கோரி திருச்சி மாநகராட்சியில் அதிமுக மனு

ஜெ.ஞானசேகர்

பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையில் வைக்கப்பட்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் படத்தை அகற்றக் கோரி திருச்சி மாநகராட்சியில் அதிமுகவினர் இன்று மனு அளித்தனர்.

திருச்சி மாநகராட்சியின் 63, 65 ஆகிய வார்டுகள், தமிழ்நாடு சட்டப்பேரவையின் திருவெறும்பூர் தொகுதியில் உள்ளன. திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக திமுகவைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். இவரது நிதி தலா ரூ.6 லட்சத்தில் 63-வது வார்டு ஆலத்தூர் மற்றும் 65-வது வார்டு செல்வபுரம் ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.

இந்தப் பயணிகள் நிழற்குடையை கடந்த 26-ம் தேதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தார். அப்போது, நிழற்குடைகளில் பயணிகள் அமரும் இருக்கைக்கு மேல் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரது படங்களுடன், உதயநிதி ஸ்டாலினின் படமும் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

செல்வபுரம், ஆலத்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தப் பயணிகள் நிழற்குடைகளில் இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் படம்.

அரசின் நிதியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தப் பயணிகள் நிழற்குடையில், கட்சி நிர்வாகியான உதயநிதி ஸ்டாலின் படத்தை எப்படி வைக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் ஆலோசனையின் பேரில், கட்சியின் அரியமங்கலம் பகுதிச் செயலாளர் ஏ.தண்டபாணி உள்ளிட்ட அதிமுகவினர் இன்று (அக். 28) மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையர் (பணியாளர்) சண்முகத்திடம் புகார் மனு அளித்தனர்.

மாநகராட்சி உதவி ஆணையர் (பணியாளர்) சண்முகத்திடம் புகார் மனு அளித்த அதிமுகவினர்.

அந்த மனுவில், "63, 65 ஆகிய வார்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி நிதியின் கீழ் பேருந்து நிறுத்தப் பயணிகள் நிழற்குடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிதி பொதுமக்களின் வரி மற்றும் அரசின் வருவாயில் இருந்து பெறப்பட்டவை. இந்த நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையில் எவ்வித அரசுப் பதவியிலும் இல்லாத, தனி நபரான, தனது நண்பர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை இடம் பெறச் செய்த எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல் கண்டிக்கத்தக்கது.

இதற்காக அவர் மீதும், புகைப்படம் இடம் பெற உடந்தையாக இருந்த மாநகராட்சி அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் படத்தை உடனடியாக அகற்றுவதுடன், அந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

இது தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவுக்கும், தொடர்புடைய துறை அமைச்சருக்கும் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கவுள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT