சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம் 
தமிழகம்

அனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரி மனு; மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

டி.செல்வகுமார்

பொதுநலன் இருப்பதால், தமிழகத்தில் அனைத்துக் கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவது பற்றி பொதுநல மனுத் தாக்கல் செய்யலாம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராமசபைக் கூட்ட விதிகளின்படியும் ஆண்டுக்கு இரு முறை, கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், செப்டம்பர் 26-ம் தேதி வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி, அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "கிராம நிர்வாகம், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராமசபைக் கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். முக்கியமான காரணம் இல்லாமல் கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது. ரத்து செய்யப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை அக்டோபர் 7-ம் தேதி நடத்தக் கோரி ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அனைத்துக் கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (அக். 28) விசாரணைக்கு வந்தபோது, இது பொதுநலம் சார்ந்த விவகாரம் என்பதால், பொதுநல மனுவாகத் தாக்கல் செய்யலாம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ரிட் மனுவைத் திரும்பப் பெறவும் மனுதாரருக்கு நீதிபதி அனுமதியளித்தார்.

SCROLL FOR NEXT