புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள். 
தமிழகம்

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கே.சுரேஷ்

பிரசவ விடுப்பாக 9 மாதங்கள் வழங்க வேண்டும். கரோனா பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனக் கோரி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (அக். 28) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் டி.பத்மா தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எம்.செல்வம் தொடக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை மாநிலப் பொருளாளர் தேவமணி விளக்கினார்.

மாவட்டச் செயலாளர் கே.பச்சையம்மாள், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் கே.முகமது அலி ஜின்னா, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி, மாவட்டத் துணைத் தலைவர் வி.கீதா, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பெ.அன்பு ஆகியோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து குறைந்தபட்சம் மாதம் ரூ.24 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதியமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.9,000, உதவியாளர்களுக்கு ரூ.5,000 வீதம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அரசின் காலிப் பணியிடங்களில் இளநிலை உதவியாளர்களாக நியமித்திட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிசுதாரர்களுக்குப் பணி வழங்க வேண்டும்.

பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டதைப்போல மே மாதம் கோடை விடுமுறையும், பிரசவ விடுப்பாக 9 மாதங்களும் வழங்க வேண்டும். கரோனா பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT