பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு மூட நினைக்கிறது என சிவகங்கை மக்களை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட வேண்டும் என்பதே மத்திய அரசின் ஒரே குறிக்கோள். படிப்படியாக இந்நிறுவனம் முடக்கப்படுகிறது. பிஎஸ்என்எல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை. தொழில்நுட்ப பொறியாளர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்படுகிறது. முழுமையாக நிறுவனத்தை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துக்கு அளிக்கும் ஊக்கத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளிக்கவில்லை. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை விற்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது"
இவ்வாறு அவர் கூறினார்.
திமுக - காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி..
மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி. இக்கூட்டணி வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சியை அமைக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற கூடிய தொகுதிகளை கேட்கும். இதற்காக ஒரு குழு அமைக்கப் பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பாஜக - அதிமுக வெற்றி பெறாது. பிஹார் தேர்தலில் நிதிஷ்குமார் முதல்வராக வரமாட்டார். ஒரு கூட்டணியில் பாஜக சேர்ந்தால் மைனஸ். காங்கிரஸ் இணைந்தால் பிளஸ்.
புதிதாக திமுக கூட்டணிக்கு ஓரிரு கட்சிகள் வரவுள்ளன. வெற்றி குறித்து பாஜகவுக்கு இருப்பது குருட்டு நம்பிக்கை. காங்கிரஸ்க்கு இருப்பது விஞ்ஞான நம்பிக்கை. கூட்டணியில் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படும். சிறுபான்மையினருக்கும் அதிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.
எய்ம்ஸ் குழுவுக்கு கண்டனம்:
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் மக்களவை உறுப்பினர்களை சேர்க்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு எம்.பி இல்லாத காரணத்தால் எய்ம்ஸ் குழுவில் எம்.பி.க்கள் யாரும் இடம்பெறவில்லை" எனக் கூறினார்.
இறுதியாக, "மனுநூல் குறித்து பாஜக தான் தெளிவுப்படுத்த வேண்டும். நடிகர் வடிவேலு பிரசாரத்துக்கு வரும்போது, கூட்டம் திரண்டது. அது வாக்குகளாகக் கிடைக்கவில்லை. 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மாதிரி குஷ்பூ, ஒவ்வொரு கட்சிக்கும் செல்கிறார்" என்று பேசினார்.
பேட்டியின்போது, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் உடனிருந்தார்.