திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையில் உதயநிதி ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பொன்மலை அருகேயுள்ள ஆலத்தூரில் ரூ.6 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அதில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் புகைப்படங்களுடன், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையை எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இந்நிலையில், இதுவரை எந்த அரசுப் பதவியும் வகிக்காத உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நிதியின்மூலம் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையில், ஒரு கட்சியின் நிர்வாகி புகைப்படத்தை எப்படி வைக்கலாம் என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அதிமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் கூறும்போது, ‘‘எந்த அரசுப் பதவியிலும் இல்லாத உதயநிதியின் புகைப்படத்தை அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் எதற்காக வைக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் செய்ய உள்ளோம்’’ என்றார்.
இதுகுறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, ‘‘இதுகுறித்து பிறகு பேசுகிறேன்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.