திருவண்ணாமலை மாவட்டத்தில் முகாமிட்டுள்ள வெளி மாவட்ட கொள்ளை கும்பலால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தி.மலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித் துள்ளன. பூட்டியிருக்கும் வீடுகள், கடைகள் மற்றும் கோயில்களில் தொடர் திருட்டு நடைபெறுகிறது. மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்திலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தி.மலை நகரில் பல்பொருள் அங்காடி, அரிசி மற்றும் வெல்ல மண்டியில் கடந்த 19-ம் தேதி நள்ளிரவு பூட்டை உடைத்து ரூ.26 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடியில் திருட முயன்றவர்களில் ஒருவரை, பொதுமக்களே பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது, ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
பின்னர், பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருடன் ஒரு கும்பல் வந்து திருவண் ணாமலையில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், அவருடன் தங்கியுள்ள கும்பலை பிடிக்கும் காவல் துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
பின்னர், திருவண்ணாமலை அடுத்த நூக்காம்படியில் உள்ள 5 கோயில் கதவுகளின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பக்தர்கள் செலுத்தியிருந்த ரூ.25 ஆயிரம், 5 கிராம் நகையை கடந்த 21-ம் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது. இதேபாணியில், கலசப்பாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தில் உள்ள 3 கோயில் கதவுகளின் பூட்டுகளை உடைத்து உண்டியல் காணிக்கை ரூ.10 ஆயிரம், 4 கிராம் நகையை கடந்த 22-ம் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையில், வந்தவாசி அடுத்த வாச்சனூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பார்வையாளரை கத்தியால் வெட்டி 7 பேர் கொண்ட கும்பல் ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்றது. மேலும், செல்லும் வழியில் சிக்கிய நபர்களை தாக்கி செல்போன் மற்றும் பணத்தையும் பறித்து சென்றது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் உதவியுடன் சென்னையைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஆரணி நகரில் நடைபெற்று வரும் இரு சக்கர வாகன திருட்டு சம்பவத்தில், மக்கள் உதவியுடன் சென்னையைச் சேர்ந்த ஒருவர் கடந்த 23-ம் தேதி பிடிபட்டுள்ளார்.
தி.மலை மாவட்டத்தில் வெளி மாவட்ட கொள்ளை கும்பல் அதிகளவில் முகாமிட்டுள்ளனர். அந்த கும்பல் ஒவ்வொரு பகுதி யாக சென்று நோட்டமிட்டு, தங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் பகுதிகளில் கைவரிசை காட்டுகின்றனர்.பகலில் பூட்டியிருக்கும் வீடுகளிலும் பணம் மற்றும் நகை தொடர்ந்து திருடு போகிறது. இந்த திருட்டு கும்பலை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுகின்றனர். இதனால், கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகும், உறவினர்கள் வீட்டுக்கு சென்று தங்குவதை மாவட்ட பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.
தி.மலை மாவட்டத்தில் பதுங்கியுள்ள வெளிமாவட்ட கொள்ளை கும்பலை பிடிக்க காவல் துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெளியாட்கள் நடமாட்டம் குறித்து, தங்களது உளவாளிகள் மூலம் முன் கூட்டியே தகவலறிந்து மேலிடத்துக்கு தெரிவிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தனிப்பிரிவு காவல் துறையினரால் பலனில்லை என்றும் கூறப்படுகிறது.
வெளிமாவட்ட கொள்ளை கும்பலை பிடிக்க மாவட்ட அளவில் ஒரு சிறப்பு குழுவை அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "கொள்ளை கும்பலில் ஈடுபட்டு வரும் வெளிமாவட்ட கும்பல் மட்டுமின்றி, உள்ளூர் கும்பலையும் பிடிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.