கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவம். 
தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்; கடையின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கைவரிசை

செய்திப்பிரிவு

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் (40). இவருக்குச் சொந்தமான வெள்ளி நகைக்கடை சத்துவாச்சாரி ஆர்டிஓ அலுவலக சாலையில் உள்ளது. வழக்கம்போல் கடையை திறக்க மதன்குமார் நேற்று காலை சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சத்துவாச்சாரி காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். கடையில் இருந்து சுமார் 750 கிராம் எடையுள்ள வெள்ளி கால் கொலுசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அங்கிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது அதிகாலை 2.30 மணியளவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் கடை ஷட்டரின் பூட்டை இரும்பு ராடால் நெம்பி உடைத்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் டேபிள் அலமாரிகளில் வைத்திருந்த வெள்ளி கால் கொலுசுகளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இவர்களில் ஒரு நபரின் முகம் கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது. அவருக்கு, சுமார் 35 வயது இருக்கலாம். உடனிருந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும்.

இருவரும் பார்ப்பதற்கு வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல் உள்ளனர். திருடுபோன வெள்ளி கால் கொலுசுகளின் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் இருக்கும் என்றும் கடையின் பாது காப்பு பெட்டக அறையில் மற்ற வெள்ளி நகைகள், பொருட்கள் இருந்ததால் அவை தப்பியது தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT