சென்னையில் தனியார் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்த முதுநிலை மருத்துவ முதலாமாண்டு மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் வனவாசி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார் (24). இவர்சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ முதலாமாண்டு மாணவர். கரோனா வார்டு பிரிவில் பணி செய்து வந்தார்.
இந்நிலையில், இவர் தியாகராய நகர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் விடுதி ஒன்றில் கடந்த 14-ம் தேதி முதல் தனிமைப்படுத்தும் நோக்கில் அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 25-ம் தேதி முதல் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகிகள் இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பிரேதப் பரிசோதனை
இதையடுத்து நேற்று முன்தினம் மாற்று சாவியைக் கொண்டு போலீஸார் அறையை திறந்து பார்த்தபோது லோகேஷ் குமார் வாந்தி எடுத்த நிலையில் படுக்கையில் இறந்து கிடந்தார். மருத்துவர் லோகேஷ் குமார் விஷம் குடித்து தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என போலீஸ்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘மரணம் அடைந்த லோகேஷ் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரியோடு இணைந்த பல மருத்துவமனைகளில் கரோனா வார்டு பணி 12 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளது. இது கண்டனத்துக்குரியது. இதை 6 மணி நேரமாக மாற்ற வேண்டும்.’’ என கேட்டுக்கொண்டுள்ளார்.