நெல்லை மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி தமிழக தலைமை செயலாளருக்கு திமுக எம்.பி. மனு கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் சா.ஞானதிரவியம் தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு:
திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ராதாபுரம் தாலுகாவில் 10 மீனவ கிராமங்கள் உள்ளன.
இதில் கூட்டப்புளி, கூடுதாழை, இடிந்தகரை, பெருமணல், விஜயாபதி ஊராட்சிக்கு உட்பட்ட தோமையார்புரம் ஆகிய மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
தற்போது கூட்டப்புளி, கூடுதாழை, இடிந்தகரை ஆகிய 3 பகுதிகளிலும் மத்திய அரசு அலுவலர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். இங்கு தூண்டில் வளைவு அமைக்க நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
அத்துடன் பெருமணல் மற்றும் தோமையார்புரம் மீனவ கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைப்பது மிகவும் அவசியமாகும்.
தூண்டில் வளைவில்லாததால் கடலில் பெரிய அலைகள் எழும்பும்போது மீனவர்கள் தங்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே கூட்டப்புளி, கூடுதாழை, இடிந்தகரை மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கவும், பெருமணல் மற்றும் தோமையார்புரம் மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.