செய்தியாளர்களிடம் பேசிய பெ.மணியரசன். 
தமிழகம்

வெளி மாநிலத்தவரைப் புறக்கணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் முழுவதும் ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரம்; தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு

ஜெ.ஞானசேகர்

வெளி மாநிலத்தவரைப் புறக்கணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் முழுவதும் ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த செப்.11 முதல் செப்.18-ம் தேதி வரை பொன்மலை ரயில்வே பணிமனை முன் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தினமும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நவ.1-ம் தேதி முதல் வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று செப்.18-ம் தேதி பெ.மணியரசன் அறிவித்தார்.

இந்தநிலையில், திருச்சியில் இன்று (அக். 27) செய்தியாளர்களிடம் பெ.மணியரசன் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, இந்தி பேசுவோர் உட்பட பிற மாநிலத்தவர்களே 90 சதவீதம் பணியாற்றி வருகின்றனர். இது மட்டுமின்றி, அமைப்புசாரா தொழிலாளர்களாக தினமும் வட மாநிலங்கள் உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் வந்து குவிகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் உரிய கல்வித் தகுதியுடனும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களாகப் பணியாற்றுவதற்கான தகுதியுடனும் உள்ள சுமார் ஒரு கோடி பேர் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

வெளி மாநிலத்தவரின் மிகை வருகையைத் தடுக்கும் நோக்கில் அசாம் மாநிலத்தில் மண்ணின் மக்கள் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளி மாநிலவத்தவரைக் கணக்கெடுத்துப் பட்டியலிட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அரசின் அனுமதியின்றி வெளி மாநிலத்தவர் சென்று தங்க முடியாது. அதற்கான உள் அனுமதிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மத்திய, மாநில அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டு மக்கள் சொந்த தாயகத்திலேயே அகதிகள் ஆகக் கூடிய அவலம் நிலவுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வெளி மாநிலத்தவருக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒத்துழையாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை நவ.1-ம் தேதி தொடங்கி, மாதம் முழுவதும் நடத்தவுள்ளோம்.

இதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் வெளி மாநிலத்தவருக்கு வாடகைக்கு வீடு அளிக்கக் கூடாது, நிலங்களை விற்பனை செய்யக் கூடாது, கடை வைக்க அனுமதி அளிக்கக் கூடாது, ஏற்கெனவே வெளி மாநிலத்தவர் வைத்துள்ள கடைகளில் பொருட்களை வாங்கக் கூடாது, வெளி மாநிலத்தவரை வேலைக்குச் சேர்க்கக் கூடாது ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, வெளி மாநிலத்தவரை அவர்கள் தாயகத்துக்கே திரும்பிச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும். இந்த அறவழிப் போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொருளாளர் அ.ஆனந்தன், திருச்சி மாநகரச் செயலாளர் வே.க.இலக்குவன், மகளிர் ஆயம் திருச்சி பொறுப்பாளர் த.வெள்ளம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT