சிதம்பரம் கீழ சன்னதியில் பாஜக மகளிரணியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

சிதம்பரத்தில் திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்துக்குத் தடை; தடையை மீறி ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது

க.ரமேஷ்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குஷ்பு பங்கேற்கவிருந்த பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் சமீபத்தில் இணையக் கருத்தரங்கு ஒன்றில், மனுநூல் பெண்களை இழிவுபடுத்துவதாகப் பேசியிருந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, பாஜகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பாஜகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (அக். 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் தங்கள் தலைவரை இழிவுபடுத்திப் பேசுவதைக் கண்டித்தும், மனுதர்ம நூலைத் தடை செய்ய வலியுறுத்தியும் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் எதிரே மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இரு கட்சியினருக்கும் நேற்று (அக். 26) இரவு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு சிதம்பரம் நகரக் காவல்துறையால் கடிதம் தரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன், கடலூர் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் ஆகியோர் சிதம்பரத்தில் முகாமிட்டு நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர்.

இன்று காலை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இரண்டு கட்சியினரும் அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக சிதம்பரத்தில் இன்று அதிகாலை முதல் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று சென்னையில் இருந்து சிதம்பரம் வந்து கொண்டிருந்த குஷ்புவை ஈசிஆர் முட்டுக்காடு பகுதியிலும், பாஜக மாநில பொதுச் செயலாளர் ராகவனை மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியிலும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கடலூர் மாவட்ட பாஜக தலைவர் இளஞ்செழியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிஷோர்குமார் உள்ளிட்ட 50 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் பால அறவாழி, முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லப்பன் உள்ளிட்ட சிலரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், சிதம்பரம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக பட்டியலின மாநிலத் தலைவர் பொன் பாலகணபதி, விவசாயச் சங்க அணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், குமராட்சி பழனிராஜா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் காந்தி சிலை முன்பு பாஜகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மதியம் சுமார் 12 மணியளவில், நடராஜர் கோயில் கீழ சன்னதியில் பாஜக மகளிரணியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில மகளிரணித் தலைவர் மீனாட்சி நித்தியசுந்தர், மாவட்டத் தலைவர் சுகந்தா செல்வகுமார், மாநிலச் செயலாளர் கிருஷ்ணசாந்தி உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் மாநில மகளிரணித் தலைவர் மீனாட்சி நித்தியசுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தியுள்ளார். அவர் மீது ஆயிரக்கணக்கான புகார்கள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. ஆனால், அவர் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். திமுக கூட்டணிக் கட்சியினரும் அவர் கைது செய்யப்படாமல் இருப்பதற்குத் தகுந்தவாறு பாதுகாப்பாக அறிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

திமுக கூட்டணிக் கட்சியினருக்கு பெரும்பான்மையான இந்துப் பெண்களின் வாக்குகள் தேவையில்லை போலும். மனுதர்ம நூல் வாழ்க்கை நெறிமுறைகளைக் கூறிய நூல். பெண்களைப் பற்றி தவறாக எழுதி இருப்பதாகக் கூறுவது பொய்யான கூற்று" என்றார்.

சிதம்பரம் பகுதியில் சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், மண்டபம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தமாக பாஜகவினர் 50 பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் பகுதி முழுவதும் டிஎஸ்பி லாமோக் தலைமையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT