தமிழகம்

ராஜவாய்க்கால் நீர் உரிமை கோரி திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் விவசாயிகள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பி.டி.ரவிச்சந்திரன்

குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து விவசாயிகள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காமராஜர் நீர்த்தேக்கம் வழியாக குடகனாறு வந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆறு ஆத்தூர் தாலுகா மல்லையபுரம். வீரக்கல் அனுமந்தராயன் கோட்டை, மயிலாப்பூர், பாராட்டி உட்பட 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக வேடசந்தூர் மற்றும் கரூர் காவிரியில் கலக்கிறது இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பல வருடங்களாக குடகனாறு ஆற்றை மட்டுமே நம்பியுள்ளனர்.

இந்நிலையில் 110 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் இந்த ஆற்றில் மேல் பகுதியில் ராஜவாய்க்கால் என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டப்பட்டதால் எட்டு வருடங்களாக குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விடவில்லை.

இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

இதில் சாலை மறியல் வீடுகளில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு போன்ற பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் கடந்த மாதம் பத்து நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டு மீண்டும் அடைக்கப்பட்டது

இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து போராட்டம் நடத்தி வந்த சூழ்நிலையில் இன்று திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் பித்தளைப்பட்டி பிரிவு அருகே பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. காவல்துறையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் கூறும்போது உடனடியாக எங்களது பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். வருடத்தில் 180 நாட்கள் கண்டிப்பாக குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரி தற்போது குழந்தைகள் முதல் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், ஏரளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT