நீட் தேர்வை, 2017 முதல் தமிழகத்தில் அனுமதித்தது போல், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மசோதாவையும் முதல்வர் பழனிசாமி காற்றில் பறக்கவிடப் போகிறாரா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 27) தன் முகநூல் பக்கத்தில், "தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்திருக்கும் ஆளுநருக்கு, மேலும் தாமதம் செய்யாமல், உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்திட உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு, நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் இன்று கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
தமிழகச் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதில் 'மயான அமைதி' காத்துவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்குச் சற்றும் சளைத்திடாமல் ஆளுநரும் போட்டி அமைதி காக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான திமுக உளப்பூர்வமாகக் கொடுத்த ஒத்துழைப்பைக் கூட நாகரிகம் இன்றி விமர்சனம் செய்யும் முதல்வர், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்குப் பிரதமருக்கோ அல்லது உள்துறை அமைச்சருக்கோ அரசியல் ரீதியாக எவ்வித அழுத்தமும் கொடுக்க ஏனோ அஞ்சுகிறார்.
கவுன்சிலிங் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கதி என்ன? ஏற்கெனவே இரட்டை வேடம் போட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து நீட் தேர்வை, 2017 முதல் தமிழகத்தில் அனுமதித்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு மசோதாவையும் முதல்வர் காற்றில் பறக்கவிடப் போகிறாரா? பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா முதல்வர் பழனிசாமி?" என ஸ்டாலின் கேட்டுள்ளார்.