திருநெல்வேலி மாவட்டம் பணகுடிமற்றும் அதனை சுற்றியுள்ள சிவகாமிபுரம், தளவாய்புரம், ரோஸ்மியாபுரம், வடலிவிளை, தெற்குவள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக குளத்து மண் எடுப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை. குளத்து மண் கிடைக்காததால் செங்கல் உற்பத்தி கணிசமாக பாதிப்படைந்துள்ளது.
இதனால் ரூ.4.50, ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த செங்கல் தற்போது ரூ.7 வரையில் விலை உயர்ந்துள்ளது. அதுவும் கிடைக்காமல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. செங்கல் உற்பத்தி குறைந்ததால், சூளைகளில் பணியாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்து விட்டனர். இதனால் பணகுடி பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதுகுறித்து ரோஸ்மியாபுரம் செங்கல் உற்பத்தியாளர் வெட்டும்பெருமாள் கூறும்போது, “செங்கல் தொழிலை பாதுகாக்கும் வகையில் குளத்துமண் எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.