கோப்புப்படம் 
தமிழகம்

முதல்வர் மதுரை வருகை: அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

செய்திப்பிரிவு

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங் கேற்க முதல்வர் பழனிசாமி அக்.30-ல் மதுரை வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அதிகாரிகளுடன் டிஜிபி திரிபாதி ஆலோசனை செய்தார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை அக்.30-ல் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதையொட்டி தென்மண்டல ஐ.ஜி. முருகன் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே டிஜிபி திரிபாதி நேற்று மதுரை வந்தார். அவர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார். அவரை மதுரை காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, தென்மண்டல ஐஜி முருகன், டிஐஜி ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சந்தித்து பேசினர். சட்டம், ஒழுங்குப் பிரச்சினை, முதல்வர் வருகை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அவரிடம் விளக்கினர்.

பின்னர் அவர் சென்னை சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் நேற்று மாலை மதுரை வந்தார். அவர் முதல்வர் வருகை மற்றும் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற்கொள்வார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT