சேலியமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் கைவினை பொம்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள். 
தமிழகம்

கரோனாவால் முடங்கிய கிராம மக்களுக்கு கைவினை பொம்மை தயாரிக்கும் பயிற்சி: வங்கி கடன் பெற 15 பேர் தேர்வு

செ. ஞானபிரகாஷ்

கரோனாவால் முடங்கிய கிராமப்புற மக்களுக்கு கைவினை பொம்மைகள் தயாரிக்கும் பயிற்சியானது புதுச்சேரி அரசின் கல்வித்துறை மூலம் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களில் 15 பேர் முதல்கட்டமாக வங்கி கடனுதவி பெற தேர்வாகியுள்ளனர்.

கரோனா ஊரடங்கில் கிராமப் புறங்களில் ஆண்களும், பெண்களும் வெளியில் வேலை செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கி இருந்தனர். வேலையிழந்து வருமானத்திற்கு தவிக்கும் இவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சுயதொழில் தொடங்க ஒரு மாதமாக சேலியமேடு அரசுப் பள்ளியில் சிறப்பு பயிற்சியை கல்வித்துறை அளித்து வருகிறது.

புதுச்சேரி அடுத்த சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் உமாபதி. இவர் கிராமப்புற பகுதிகளில் கிடைக்கும் தென்னை, பனை மரங்களிலிருந்து விழுந்து குப்பையில் சேரும் பொருட்களை கலைப் படைப்புகளாக மாற்றுவதில் வல்லமை படைத்த மாணவர்களை உருவாக்கியுள்ளார். இம்மாணவர்கள் திருச்சி, சென்னை, புதுச்சேரி என பல நகரங்களில் தனியார் கல்லூரிகளில் கலை வகுப்புகளும் எடுத்துள்ளனர்.

கரோனா முன்னெச்சரிக்கையுடன் இந்தப் பயிற்சியை நுண்கலை ஆசிரியர் உமாபதி இலவசமாக வழங்கினாலும், பயிற்சிக்கு தேவையான பொருட்களை அப்பகுதியில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று அளித்து உதவியது.

தேர், பல்லக்கு, பாரம்பரிய வில்லு வண்டி, அலங்கார மேடை, தொங்கும் விளக்கு, ஆரத்தி தட்டு என 200 வகையான கலை நயம்மிக்க பொம்மைகளை அவர்கள் உருவாகியுள்ளனர். இவற்றில் தமிழர்களின் பாரம்பரியமிக்க வில்லு வண்டி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதுதொடர்பாக பயிற்சி ஆசிரியர் உமாபதி கூறுகையில், “கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு அனுமதியுடன் பயிற்சி அளிக்கிறோம். தொண்டு நிறுவனம் சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. பயிற்சி பெற வந்தோருக்கு நாள்தோறும் ரூ. 50-ம், தேவையான பொருட்களும் வாங்கித் தந்தார். அத்துடன் பொருட்களை வைக்க ரூ. 22 ஆயிரத்துக்கு பெட்டிகளை வாங்கினோம். பெட்டியில் கலைப் பொருட்களை வைத்து கொடுத்தால் கூடுதலாக கவனம் பெற முடிகிறது.

கிராமத்தில் கிடைக்கும் பொருட்களையே பயன்படுத்தினோம். பள்ளி மாணவர்களின் பெற்றோர், கிராமத்தைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்றனர். இங்கு உருவான படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. பயிற்சி பெற்றவர்கள் தொடர்ந்து இத்தொழிலை செய்ய , 5 பேர் முதல் கட்டமாக வங்கி கடன் பெற தேர்வாகியுள்ளது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது” என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT