தமிழகம்

மழைநீர் வழிந்து சென்றால் நிலத்தடிநீர் ஆதாரம் பாதிக்கும்; ஈசிஆர் சாலையில் மக்கள் எதிர்ப்பை மீறி மழைநீர் வடிகால்: சென்னை மாநகராட்சி மீது குடியிருப்போர் நலச் சங்கங்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) பகுதியில் மக்கள்எதிர்ப்பை மீறி மழைநீர் வடிகாலை மாநகராட்சி அமைத்து வருவதாக குடியிருப்போர் நலச் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் சிறந்த
வடிகால் வசதிகளை ஏற்படுத்த ரூ.4 ஆயிரத்து 34 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதற்காக அடையாறு, கூவம்,
கோவளம் மற்றும் கொசஸ்தலைஆறு என 4 திட்டப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு வடிநிலப் பகுதிகளில் 405 கி.மீ. நீளத்துக்கு உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆலந்தூர், புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி, கோவளம் வடிநிலப் பகுதியில் 3 திட்டப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு சுமார் 360 கி.மீ. நீளத்துக்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1,243 கோடி வழங்குமாறு ஜெர்மன் நாட்டு வளர்ச்சி வங்கியிடம் சென்னை மாநகராட்சி நிதியுதவி கோரி இருந்தது.

இத்திட்டம் தற்போது கோவளம் வடிநிலப் பகுதிகளில் துரைப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

குடியிருப்போர் சங்கம் எதிர்ப்பு

இதற்கு அக்கரை, பாலவாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அவர்களைகடந்த 22-ம் தேதி ரிப்பன்மாளிகைக்கு அழைத்திருந்த மாநகராட்சி நிர்வாகம், அத்திட்டம் ஏன் செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து விளக்கியது. அக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்,முதன்மை தலைமை பொறியாளர் எல்.நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதுகுறித்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

இத்திட்டம் குறித்த விரிவான அறிக்கை பொதுவெளியில் வைக்கப்படவில்லை. கிழக்கு கடற்கரை சாலை பகுதி மணற்பாங்கான பகுதி. அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதே இல்லை.மாநகராட்சி தற்போது காட்டிய வெள்ளம் தொடர்பான படங்களில் ஒன்று மட்டுமே எங்கள் பகுதியைச் சார்ந்தது. மற்றவை எல்லாம் சென்னையில் பிற பகுதிகளைச் சார்ந்தவை.

மாநகராட்சி நியமித்த கலந்தாலோசகர்களும், லாரியில் நீரை கொண்டு வந்து நீலாங்கரை பகுதியில் விட்டனர். உடனே அங்கு நீர் நிலத்துக்கடியில் உறிஞ்சப்பட்ட நிலையில், இங்கு மழைநீர் வடிகால் தேவையில்லை என தெரிவித்திருந்தனர்.

இத்திட்டத்துக்காக கடலோரஒழுங்குமுறை மண்டல விதியின்கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை. திட்டத்தை செயல்
படுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும் தயாரிக்கப்படவில்லை. இப்பகுதிக்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் தேவையில்லை. அப்படி அமைத்தால் அப்பகுதியில் நிலத்துக்கடியில் மழைநீர் செல்வது பாதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவித்தோம்.

உடனடி தேவை குடிநீர்

ஆனால், “இத்திட்டத்தை மக்கள் வரவேற்கின்றனர். இத்திட்டம் நிறுத்தப்படாது” எனமாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எங்களுக்கு உடனடிதேவை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிதான். அதைச் செய்யாமல், எங்களுக்கு தேவையில்லாத திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி, எங்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறது என்றனர்.

‘இப்பகுதிக்கு தேவையில்லாத திட்டம்’

மாநகராட்சியின் இத்திட்டம் தொடர்பாக ஸ்வரன் (Save Water and Recharge Aquifer Network) அமைப்பின் ஒருங்
கிணைப்பாளர் ராம்சங்கர் கூறும்போது, “கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வெள்ளம் வருவதாக பொய்யாக சித்தரித்து,
இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இது இப்பகுதிக்கு தேவையில்லாத திட்டம். ஏற்கெனவே, மழைநீர் வடிகாலால், மழைநீர் நிலத்தடிக்கு செல்வது பாதிக்
கப்படுகிறது. எனவே, மாநகராட்சி முழுவதும் மழைநீர் வடிகாலுக்கு பதிலாக, மழைநீரை நிலத்துக்கடியில் செலுத்தும் உறைகிணறுகளை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாநகராட்சியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரு
கிறோம். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் எதையும் பொருட்படுத்தாமல் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT