மல்லிகேஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த நவராத்திரி விழா நேற்றுடன் நிறைவுபெற்றது.
மாமல்லபுரம் நகரில் அமைந்துள்ள மல்லிகேஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்பாள் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் கடந்த 10 நாட்களாக நவராத்திரி விழா நடைபெற்று வந்தது. இதில், காமாட்சி, மீனாட்சி, கன்னியாகுமரி தேவி உட்பட பல்வேறு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தார். நவராத்திரியின் 9-ம் நாளான நேற்று முன்தினம் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் மல்லிகேஸ்வரி அம்பாள் அருள்பாலித்தார்.
இந்நிலையில், கடைசி நாளான நேற்று மகிஷாசுர மர்த்தினி அலங்காரத்தில் மகிஷன் எனும் அரக்கனை வதம் செய்யும் துர்க்கை அலங்காரத்தில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அம்பாள் அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.