காஞ்சிபுரம் மாவட்டம் பெண் உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வருவது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பா.பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுஉள்ளார்.
ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சாமுண்டீஸ்வரி இங்கேயே பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் சரகதுணைத் தலைவராக உள்ளார்.காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சண்முகப்பிரியாவும், சுகாதாரத் துறை துணை இயக்குநராக ஜீவா, மாவட்ட சமூக நல அலுவலராக சங்கீதா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா உட்பட பல முக்கிய பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகளே அதிகம் உள்ளனர்.
காஞ்சிபுரத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் உட்கோட்ட துணைகண்காணிப்பாளராக மணிமேகலையும், காஞ்சிபுரம் நகராட்சிஆணயராக மகேஸ்வரியும் பணியாற்றி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதிபெண் அதிகாரிகள் கட்டுப்பாட்டிலும், காஞ்சிபுரம் நகரம் ஏறக்குறைய முழுமையாக பெண் அதிகாரிகள் கட்டுப்பாட்டிலும் வந்துள்ளது. காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்த சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்துக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை.
பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பான்மையான பதவிகளில் பெண்அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பலரும் மகிழ்ச்சிதெரிவித்துள்ளனர். பெண் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் அதிக வளர்ச்சி அடைந்தால் இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.