தமிழகம்

சசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

சசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் தெரியவரும் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று 2017 பிப்ரவரி 14-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது விடுதலை குறித்து வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது:

கர்நாடகாவில் அக்.27-ம் தேதி (இன்று) வரை தசரா விடுமுறை. இதற்கு பிறகு, சசிகலா விடுதலை தொடர்பாக நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்தில் இருந்து தகவல் வந்ததும் அபராதத்தை செலுத்துமாறு சசிகலா கூறியுள்ளார். அபராதம் செலுத்தும் நடைமுறை ஒரு நாளிலும் முடியலாம், ஓரிரு நாளும் ஆகலாம்.

சொத்துக் குவிப்பு வழக்குநடைபெற்ற 36-வது சிறப்பு நீதிமன்றத்தின் பணி முடிந்துவிட்டது. தற்போது, அபராதம் செலுத்துவது தொடர்பான உத்தரவை பொறுப்பு நீதிமன்றம்தான் பிறப்பிக்கும். உத்தரவு வந்ததும் அபராதத்தை செலுத்திவிடுவோம். அதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT