திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு 3 கிலோ தங்க கொண்டை உபயமாக வழங்கப்பட்டுள்ளது. ரத்தின அங்கி, தங்க பாண்டியன்கொண்டையுடன் அருள்பாலித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இக்கோயிலில் பெருமாளை வழிபட்டு உள்ளனர்.
குடும்ப சகிதமாக அருள்பாலிக்கும் பெருமாள்
இந்த கோயிலில் மூலவர் வேங்கடகிருஷ் ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக அருள்பாலிக்கிறார்.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இதுமட்டுமின்றி, உற்சவருக்கு ரத்தின அங்கி உள்ளிட்டவை உபயதாரர்களால் ஏற்கெனவே உபயமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி மற்றும் அவரது குடும்பத்தினரின் சார்பில், ரோஸ் கட் வைர கற்கள், ரூபி கற்கள், புளூ சபையர் கற்கள், பெரிய பச்சை மரகத கற்கள், சிறிய மரகத பச்சை கற்கள் பதிக்கப்பட்ட தங்க பாண்டியன் கொண்டை, உற்சவருக்கு உபயமாக வழங்கப்பட்டது. இந்த தங்க கொண்டை 2,966 கிராம் எடை கொண்டதாகும்.
தங்க கொண்டை நேற்று காலை 10 மணியளவில் உற்சவருக்கு சாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள்தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏற்கெனவே உபயதாரர்களால் வழங்கப்பட்ட ரத்தின அங்கி, தங்க பாண்டியன் கொண்டையுடன் அருள்பாலித்த உற்சவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.