மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் என்று தேமுதிகவினருக்கு அக்கட்சி தலைவர் விஜய காந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாணவர்களை கொண்டு இந்தியாவில் மாற்றத்தை கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். மாணவர்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கையூட்டும் அறிவுப்பூர்வமான கருத்துகளை கூறினார். தன்னுடைய இறுதி மூச்சுவரை மாணவர்களுடன் இரண்டறக் கலந்திருந்த அப்துல் கலாமின் பிறந்த நாளை “மாணவர் தினமாக” கொண்டாட வேண்டுமென்று கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கோரிக்கை விடுத்தேன். தேமுதிக சார்பிலும் மாணவர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று கூறியிருந்தேன்.
எனவே, அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி தேமுதிகவின் அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளைகளிலும், அப்துல்கலாமின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியும், மரக்கன்றுகளை நட்டும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலாமின் புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகள், நோட்டு, புத்தகங்கள், ஜாமெண்ட்ரி பாக்ஸ், பேனா, பென்சில் போன்ற பல்வேறு பொருட்களை வழங்கி வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்.