திருமாவளவனின் முழுப் பேச்சையும் பார்த்துவிட்டுத் தமிழக அரசு முடிவு எடுக்கவேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாகப் பேசியதாகப் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இதையடுத்துக் கலகம் விளைவிக்கும் கருத்தோடு செயல்படுதல், சமயம், இனம் சார்ந்து வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை உருவாக்குதல், மத உணர்வைப் புண்படுத்தும் சொற்களைச் சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது தமிழக சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்துப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ''தற்போது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. முழுப் பேச்சையும் கேட்காமல், களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமாவளவன் பேச்சைத் திரித்து, களங்கம் விளைவிக்கவும் பழி போடவும், பொய்ப் புகார்களைப் பாஜக தந்துள்ளது.
சொல்லும் கருத்தைத் திசை திருப்பிப் பழி சொல்வதைப் பாஜக சாதுரியமாகச் செய்யும். திருமாவளவனின் முழுப் பேச்சையும் பார்த்துவிட்டுத் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். பொய்ப் புகார் தந்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் மீது பழி சுமத்துவதைப் பாஜக வாடிக்கையாக வைத்துள்ளதைக் கண்டிக்கிறேன்'' என்று தெரிவித்தார்.