தமிழகம்

மத்திய அரசின் அதிகாரம் மூலம் பாஜக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குப் பெரும் துரோகம் இழைத்துள்ளது: மார்க்சிஸ்ட் விமர்சனம்

செய்திப்பிரிவு

மத்திய பாஜக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூக நீதிக்கு எதிரான தன் நிலைப்பாட்டின் காரணமாக தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெரும் துரோகம் இழைத்திருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“மருத்துவப் பட்டப் படிப்புகளில் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் இடங்களில் இந்த ஆண்டே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

டிஜிட்டல் யுகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுவிட்டோம். அது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகள் நடந்துவிட்டன. எனவே, இந்த ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகும். அரசு நினைத்தால் சில நாட்களிலேயே விண்ணப்பம் பெற்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.

பாஜக மற்றும் சங்பரிவாரம் எந்தக் காலத்திலும் சமூக நீதிக் கோட்பாட்டையோ ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. எனவேதான் அவர்கள் மருத்துவ உயர் கல்வியில் தமிழக அரசு கிராமப்புறத்தில் பணிபுரிவோருக்கு இட ஒதுக்கீடு செய்ததை இந்திய மெடிக்கல் கவுன்சில் மூலம் தடுத்து நிறுத்தினார்கள்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று உச்ச நீதிமன்றம் பல நேர்வுகளில் சொல்லியிருக்கிறது. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பதை நீதிமன்றம் கடைப்பிடிக்கத் தவறி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனைப் பாதிக்கக்கூடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

அதேசமயம் மத்திய பாஜக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூக நீதிக்கு எதிரான தன் நிலைப்பாட்டின் காரணமாக தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெரும் துரோகம் இழைத்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT