தமிழகம்

குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கொலையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் தம்பி உட்பட இருவர் கைது: தேர்தல் தோல்விக்குக் காரணமாக இருந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம்

என்.சன்னாசி

குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கொலை உட்பட இருவர் கொல் லப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில் உட்பட இருவரை போலீஸார் 15 நாட்களுக்கு பின் கைது செய்தனர். உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு காரணமாக இருந்ததால் தீர்த்துக்கட்டியாத அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மதுரை வரிச்சியூர் அருகிலுள்ள குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன்(55). அவருடன் இருந்த ஊராட்சி ஊழியர் முனியசாமி(45) ஆகியோர் கடந்த 11-ம் தேதி இரவு அருகிலுள்ள மலைப் பகுதியில் வைத்துகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக எஸ்பி சுஜித் குமார் உத்தரவின்பேரில், கருப்பாயூரணி காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

போட்டியின்றி தலைவரான அவருக்கு தேர்தல் குறித்த பெரிய எதிர்ப்பு எதுவுமின்றி, ஊராட்சி செயலர் நியமனம் தொடர்பாக அவருக்கும், அதே ஊராட்சியில் செயலராக பணி புரியும் பால்பாண்டிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் பால்பாண்டி, முன்னாள் தலைவர் திருப்தி மீது சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.

இருப்பினும், துப்பு கிடைக்காத நிலையில் பல் வேறு நிலையிலும் விசாரணை சென்றது.

இந்நிலையில் பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில் மனைவி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்திக்க, கிருஷ்ணனே காரணம் என, தெரிந்து அது குறித்து விசாரித்தனர்.

இது தொடர்பாக செல்வம் மற்றும் அவரது தம்பி செந்தில், இவரது நண்பர் பாலகுரு ஆகியோரிடமும் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. செந்தில் மனைவி தோல்விக்கு காரணமாக இருந்ததாக கிருஷ்ணனை செந்தில்(40) பாலகுரு(46) ஆகியோர் கிருஷ்ணனை கொலை செய்தனர். தடுக்க முயன்ற முனியசாமியும் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் நேற்று கைது செய்யப்பட்டு, விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ‘‘ குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் பதவி நீண்ட நாளாக இரு சமூகத்தினர் இடையே சுழற்சி முறையில் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். இதன்படி, 2020-ல் கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

இருப்பினும், 2020-ல் ரவுடி வரிச்சியூரின் செல்வம் தம்பி செந்தில் என்பவரின் மனைவி மலர்விழிஒன்றிய கவுன் சிலர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். வாக்கு எண்ணும் போது, பிற ஊர்களில்முன்னணியில் இருந்த மலர்விழி, குன்னத்தூரில் 240 ஓட்டுக்கள் பின்தங்கினார். எதிர்பார்த்த ஓட்டுக்கள் பதிவாக வில்லை.

தேர்தலுக்கு முன்பாகவே கிருஷ்ணனிடம் உறுதி கேட்டபோது, ஆதரவளிப்பதாக கூறிய அவர், மலர்விழிக்கு எதிராக பணி செய்தது அவர்களுக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. நம்ப வைத்து தோற்கடிக்க காரணமான கிருஷ்ணனை தீர்த்துக் கட்ட முடிவெடுத்த செந்தில் அவரது நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்துள்ளார். எப்போதும், கிருஷ்ணன் 10 பேருடன் மலை இருப்பதால் சதித்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

சம்பவத்தன்று இரவு கிருஷ்ணனும், முனியசாமியும் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செந்தில், பாலகுருவும் முதலில் கிருஷ்ணனை வெட்டியுள்ளனர். தடுக்க முயன்ற முனிச்சாமியும் கொல்லப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் பாலகுருவின் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுவதற்கு கிருஷ்ணன் காரணமாக இருந்தால் அவரும் சதித் திட்டத்தில் சேர்ந்து இருப்பதும் தெரிகிறது.

ஏற்கெனவே வரிச்சியூர் செல்வம், அவரது தம்பியிடம் விசாரித்தபோதிலும், ஆதாரம் அடிப்படையில் கொலையாளிகளை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. வேறு நபர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம், என்றனர்.

SCROLL FOR NEXT