தென்காசி மாவட்டம், ஆவுடையார்புரம் தோப்பு கிராமத்தில் வயல்வெளிகளில் பல பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் விரிவான அகழாய்வு நடத்தினால் முற்கால வரலாற்றுத் தகவல்கிள் கிடைக்கும், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் மாங்குடி கிராமம் உள்ளது. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியை இயற்றிய மருதனார் வாழ்ந்த ஊர் இது. இந்த ஊரில் கடந்த 2002-ம் ஆண்டில் அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில், ரோமானியப் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. நாயக்கர்புஞ்சை என்ற பகுதியில் பத்து குழிகள் போடப்பட்டு அகழாய்வு செய்ததில், நுண்கற்காலம் மற்றும் வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த சான்றுகள் கிடைத்துள்ளன.
தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இப்பானை ஓடு சங்ககாலத்தைச் சார்ந்தது (கிமு 200) என அறியப்படுகிறது.
இந்த ஊரின் அருகில் உள்ளது ஆவுடையார்புரம்தோப்பு என்ற சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் தேவியாற்றின் கரையில் உள்ள வயல்வெளிகளில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன.
மேலும், வயல்களில் உழவு செய்தபோதும், பள்ளம் தோண்டியபோதும் பல பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில சிலைகளை அருகில் உள்ள கோயில்களுக்கு கொண்டுசென்று வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர்.
பீடத்துடன் கூடிய சிலை ஒன்று சாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை சாய்ந்த நிலையிலேயே வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வழிபடுகின்றனர்.
மற்றொரு சிலை சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது விநாயகர் உருவம் போன்று இருந்தததாக மக்கள் கருதியதால் அந்த சிலைக்கு விநாயகர் உருவம் கொடுத்து வழிபடுகின்றனர். மண் மூடிய நந்தி சிலை ஒன்றும் இருந்துள்ளது. அதை முழுவதுமாக வெளியே எடுக்காமல் அப்படியே வைத்து வழிபடுகின்றனர்.
மேலும், மான் வாகனத்தில் பெண் தெய்வம் சிலை ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிடைத்துள்ளது. ஒரு கை உடைந்த நிலையில் அந்த சிலை உள்ளது. உடைந்த கையில் சங்கு சக்கரம் உள்ளது. அந்த சிலையையும் எடுத்து வைத்து வயல்வெளி பகுதியிலேயே வைத்து வழிபடுகின்றனர்.
மேலும், கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டது போன்ற ஏராளமான கற்களும், கல் உரல்களும் கிடைத்துள்ளன. மேலும், கல்வெட்டு ஒன்றும் உள்ளது. சுண்ணாம்பு, செங்கல் கொண்டு கட்டப்பட்ட கட்டுமானத்தின் எச்சங்களும் உள்ளன. எனவே, இப்பகுதியில் விரிவான அகழாய்வு நடத்தினால் பல வரலாற்றுத் தகவல்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாங்குடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துரைமுத்து கூறும்போது, “ஆவுடையார்புரம் தோப்பு பகுதியில் தேவியாற்றங்கரையில் உள்ள வயல்வெளிகளில் பல சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் பெரிய அளவிலான கோயில், குடியிருப்புகள் பழங்காலத்தில் இருந்திருக்கலாம். ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அவை அழிந்திருக்கக்கூடும்.
மாங்குடி கிராமத்தில் நடந்த அகழாய்வு போல் ஆவுடையார்புரம் தோப்பு பகுதியில் தேவியாற்றங்கரையில் உள்ள வயல்வெளிகளில் அகழாய்வு செய்ய வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசும், தொல்லியல் துறையும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.