தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பேசினார். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக, பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்: காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பேட்டி

ரெ.ஜாய்சன்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், ஏ.டி.எஸ்.அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து கையெழுத்து இயக்கத்தை சஞ்சய் தத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓர் அணியில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக நாடு முழுவதும் கையெழுத்து பிரச்சார இயக்கம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

நாடு முழுவதும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நவம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மற்றும் தலித் மக்களை பாதுகாக்க தவறிய பாஜக அரசை கண்டித்து நவம்பர் 5-ம் தேதி காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படவுள்ளது.

மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு இவைகளை பார்த்துக் கொண்டு மவுனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழக மக்கள் புத்திசாலிகள். அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றார் அவர்.

SCROLL FOR NEXT