ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க உத்தரவிட முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து வஞ்சகப் போக்குடன் நடந்துகொள்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவப் படிப்பு இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும், அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தவும் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் இவ்வாண்டு இட ஒதுக்கீடு இல்லை என நிராகரித்து, இடைக்கால நிவாரணம் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு, குழுவை முறையாக அமைக்கவில்லை என்றும், தாமதமாகக் குழுவை அமைத்தது என்றும், மத்திய அரசை வலியுறுத்துவதில் மெத்தனம் காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்தன.
இந்நிலையில் தீர்ப்பு குறித்தும், மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
“மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மதிமுக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.