சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கும் பணியில் பள்ளத்தை மூட அமைக்கப்பட்டிருந்த கனத்த இரும்புத் தகடு கண்டெய்னர் லாரியின் பாரம் தாங்காமல் முறிந்தது. இதனால் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. விடுமுறை தினம் என்பதால் உள்ளே ஆட்கள் வேலை செய்யாததால் பெரும் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.
வண்ணாரப்பேட்டை முதல் மீனம்பாக்கம் வரையிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு வரையிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பணி கடந்த மாதம்தான் மீண்டும் தொடங்கியது.
சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கும் இடத்தில் போக்குவரத்து பாதிக்காத வகையில் பல அடிகள் நீள அகலமுள்ள இரும்புத் தகடுகளை மேலே மூடிபோல் போட்டு மூடி விடுவார்கள். அதன்மீது சாதாரணமாக போக்குவரத்து நடைபெறும். உள்ளே வேலை நடக்கும். இந்தத் தகடுகள் பல டன் எடையுள்ள வாகனங்கள் சென்றாலும் தாங்கும். இதேபோன்று தகடு போட்டு மூடியும் பணிகள் நடந்துவந்தன.
இந்நிலையில், நேற்றிரவு சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு நோக்கி இரும்புத் தகடுகள் அடங்கிய ரோல்களுடன் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியில் இடைவெளிவிட்டு இரும்புத் தகடு ரோல் ஏற்றப்பட்டிருந்தது. ஒவ்வொரு ரோலும் பல டன்கள் எடை இருக்கும்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருக்கும் போது சாலையில் மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்டு வந்த இரும்புத் தகடு பாரத்தைக் கடந்தது. அப்போது கண்டெய்னர் லாரியில் இருந்த பல டன் லோடு இரும்புத் தகடு ரோல்களின் பாரம் தாங்காமல் தரையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தகடு பெயர்ந்து விழுந்தது.
இரும்புத் தகடு பெயர்ந்ததால் ஏற்பட்ட பள்ளம், இடிபாடுகளில் லாரி கீழே விழுந்தது. இரும்புத் தகடு ரோல்கள் அறுத்துக்கொண்டு பள்ளத்தில் விழுந்தன. லாரியின் முன்பக்கம் கடந்த நிலையில், லாரியின் கண்டெய்னர் பகுதி பள்ளத்தில் விழுந்ததால் முன்பகுதி பத்தடி உயரத்திற்கு மேல் தூக்கிக்கொண்டது. இதனால் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். லாரியிலிருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்.
சுரங்கம் அமைக்கும் பள்ளத்தில் லோடுடன் லாரி விழுந்த நேரத்தில் உள்ளே தொழிலாளிகள் வேலை செய்யவில்லை. நேற்று ஆயுதபூஜை விடுமுறை தினம் என்பதால் யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர் பலி தவிர்க்கப்பட்டது. விபத்து நள்ளிரவில் நடந்ததால், வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததால் மேலும் வாகனங்கள் விபத்தில் சிக்கவில்லை.
பள்ளத்தில் விழுந்த கண்டெய்னர் லாரியை அகற்ற முடியாமல் இரவு முழுவதும் போலீஸார் திணறி வந்த நிலையில் பெரிய இயந்திரங்கள் மூலம் காலையில் லாரியை மீட்கும் பணியும், உள்ளே விழுந்த பல டன்கள் எடையுள்ள இரும்புத் தகடு ரோல்களை மீட்கும் பணியும், மீண்டும் சாலையை பழையபடி இரும்புத் தகடு மூலம் மூடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
விபத்து குறித்து பூக்கடை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு குறித்தும் மெட்ரோ ரயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.