தமிழகம்

அமைச்சர் துரைக்கண்ணு நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

கரோனா தொற்று, மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில், எக்மோ கருவி துணையுடன் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணு விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 14-ம் தேதி விழுப்புரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை நேற்று அதிகாலை 4 மணிக்குப் பின்னடைவைச் சந்தித்தது.

அப்போது முதல் அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் நேற்று நேரில் காவேரி மருத்துவமனைக்குச் சென்று அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

''72 வயதாகும் அமைச்சர் துரைக்கண்ணு தீவிர மூச்சுத்திணறல் காரணமாக அக்.13 ஆம் தேதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்ததில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் அவர் பல்வேறு இணைய நோய் பாதிப்பில் உள்ளதும், சி.டி.ஸ்கேன் சோதனையில் அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. தற்போது அவர் எக்மோ கருவி உதவியுடன் அதிகப்பட்ச கவனிப்பில் உள்ளார்'' என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து அறிந்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர் பூரண உடல்நலம் பெற வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். அமைச்சர் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT