வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை பாதிப்படைந்துள்ளதால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவல் கிடைத்ததை அடுத்து முதல்வரைக்கண்டு துக்கம் விசாரிக்க அமைச்சர் துரைக்கண்ணு சென்னையிலிருந்து சேலம் கிளம்பிச் சென்றார். கார் திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்த அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூச்சுத்திணறலுக்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 4 மணி முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரைக் காண முதல்வர் பழனிசாமி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதியம் 3 மணிக்கு முதல்வர் காவேரி மருத்துவமனைக்கு அமைச்சரை காணச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.