தமிழகம்

கோவில்வழி தற்காலிக பேருந்து நிலையத்தில் கடைகள் அமைக்க மாநகராட்சி அனுமதிக்க வேண்டும்: பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் வலியுறுத்தல்

இரா.கார்த்திகேயன்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி முழுவீச்சில்நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச்8-ம் தேதி அங்கிருந்த கடைகளும்முழுமையாக இடிக்கப்பட்டன.

இதையடுத்து, கோவில்வழிபகுதியில் தற்காலிக பேருந்துநிலையம் அமைக்கப்பட்டது. மதுரை, பழநி, தாராபுரம், திண்டுக்கல், திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சார்ந்த பகுதிகளுக்கு செல்ல,கோவில்வழி பேருந்து நிலையத்தில்இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் இடிக்கப்பட்ட கடைக்காரர்கள் பலரும், கோவில்வழியில் கடைகள் அமைத்து தர வேண்டுமென மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையிலும், கடைகளை நடத்த ஏற்பாடு செய்துதரவில்லை என்கின்றனர், வியாபாரிகள்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "உணவகங்கள், பேக்கரிகள், பழக்கடை, எலெக்ட்ரானிக் கடை என பல்வேறு கடைகள், பழைய பேருந்து நிலையத்தில் இடிக்கப்பட்டன.

9 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் கடை உரிமத்தை,கடந்த 2016-ம் ஆண்டு பலரும் புதுப்பித்தோம். அப்படிபார்த்தாலும் இன்னும் 4 ஆண்டுகள் முழுமையாக கடை நடத்தலாம். இடிக்கப்படும் நாள் வரை முழுமையாக வாடகை செலுத்திய கடைகளுக்கு, கோவில்வழியில் முன்னுரிமை அடிப்படையில் கடை நடத்த அனுமதி அளித்திருக்கலாம். ஆனால், இதற்கான எந்த முயற்சியையும் மாநகராட்சி மேற்கொள்ளவில்லை. கரோனா ஊரடங்கால் ஏற்கெனவே பல குடும்பங்கள் வீதிக்கு வந்துவிட்டன. மாநகராட்சி உதவி ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆகியோரை சந்தித்து முறையிட்டோம்.

இடம் மட்டும் போதும்

மாநகராட்சி இடம் கொடுத்தால்கூட, கோவில்வழி தற்காலிக பேருந்து நிலையத்தில் கடை அமைத்துக்கொள்கிறோம் என்றோம். பேருந்து நிலையத்துக்குள் 156 அடி நீளம், 16 அடி அகலத்தில் இடம் உள்ளது. இதற்காக அளவீடு செய்யும் பணியும் நடந்தது. தற்போது, பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கிய நிலையில், இதற்கான எந்தவித முன்னெடுப்புகளையும் யாரும் எடுக்கவில்லை. மாதக் கணக்கில் தாமதமாவதால், செய்வதறியாது வியாபாரிகள் பலர் தவிக்கின்றனர். விரக்திஅடைந்த சிலர், வேறு இடங்களில்கடைகளை அமைக்க தொடங்கியுள்ளனர். இதனால் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பழைய பேருந்து நிலையத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நிறைவடைய இன்னும் ஓராண்டு ஆகும். ஒவ்வொரு கடைக்காரரின்ரூ.3 லட்சம் முன்வைப்புத்தொகைமாநகராட்சி வசமே உள்ளது. ஆகவே, கோவில்வழி தற்காலிக பேருந்து நிலையத்தில் தற்காலிக கடைகளை மாநகராட்சி ஏற்படுத்தி தர வேண்டும்" என்றனர்.

சுகாதாரமான உணவு

பயணிகள் சிலர் கூறும்போது,"கோவில்வழி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கும் தேவையான உணவு, தேநீர் உள்ளிட்டவைகூட, சுகாதாரமான முறையில் கிடைப்பதில்லை. இதில், சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்த வேண்டும்" என்றனர்.

முடிவு எடுக்கவில்லை

திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பிரமணியம்‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, "கோவில்வழி தற்காலிக பேருந்து நிலையத்தில்,பேருந்துகள் நிறுத்த மட்டுமே இடம் உள்ளது. அங்கு கடைகள் அமைக்கும் அளவுக்கு போதிய இடம் இல்லை. கடைகள் அமைக்க அனுமதி கோரி பலரும்விண்ணப்பித்துள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி எந்தவித முடிவும் எடுக்கவில்லை"என்றார்.

SCROLL FOR NEXT