தமிழகம்

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி பூக்கள், பழங்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை, நாளை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்கள், பழங்கள், அச்சு வெல்லம், பொரி, கரும்பு, வாழைக்கன்று உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கோவையில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வைசியாள் வீதி, ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

புருக்பாண்ட் சாலை பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பூமார்க்கெட் வளாகத்தில் நேற்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் இருந்தது. பூ வியாபாரிகள் கூறும்போது, ‘‘தினசரி சராசரியாக 50 முதல் 60 டன் அளவுக்கு பூக்கள் விற்பனைக்கு வரும். பண்டிகை நாட்கள் என்பதால், நேற்று மட்டும் 100 டன் அளவுக்கு பூக்கள் கொண்டுவரப்பட்டன.

சாமந்திப் பூ கிலோ ரூ.140 முதல் ரூ.250, மல்லிகைப் பூ ரூ.1000 முதல் ரூ.1,200, சம்பங்கி ரூ.300, கோழிக்கொண்டை பூ ரூ.160, வாடாமல்லி ரூ.70 முதல் ரூ.120, அரளி ரூ.340 முதல் ரூ.400, செண்டுமல்லி ரூ.50 முதல் ரூ.110 வரையும், ரோஜாப் பூ ரூ.300-க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டன’’ என்றனர். கடந்த இரு தினங்களுடன் ஒப்பிடும்போது மல்லியின் விலை ரூ.200-ம், சாமந்தி, சம்பங்கி பூக்களின் விலை இரு மடங்கும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, ஒரு ஜோடி கரும்பு ரூ.100 முதல் ரூ.120 வரையும், ஒரு ஜோடி வாழைக்கன்று ரூ.40 முதல் ரூ.50 வரையும், அச்சுவெல்லம், கரும்புச் சர்க்கரை ஆகியவை கிலோ ரூ.55-க்கும், பொரி ஒரு பக்கா ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

மகாராஷ்டிரா, டெல்லி, சிம்லா, நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு பழ வகைகள் கொண்டுவரப்படுகின்றன. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.130-க்கும், மாதுளை ரூ.180-க்கும், சாத்துக்குடி ரூ.40-க்கும், ஆரஞ்சு ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு வரை மாதுளை கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. மேலும் சுவாமிகளின் படங்கள், அலங்காரத்துக்கான வண்ண காகிதங்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.

SCROLL FOR NEXT