தமிழகம்

விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால் ரேஷனில் வெங்காயம் விநியோகம்: உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

செய்திப்பிரிவு

விலை உயர்வு தொடர்ந்து நீடிக்குமேயானால் ரேஷன் கடைகளில் வெங்காயம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அருகே மணவிடுதி ஊராட்சி கிடாரம்பட்டியில் கடந்த வாரம் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பருவத்தில் 32 லட்சத்து 41 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களது வங்கிக் கணக்குகளில் ரூ.6,130 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்த மாதத்தில் 23-ம் தேதி வரை 3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுஉள்ளது. குறுவைப் பருவத்தில் 23 நாட்களில் இதுபோன்று இதற்கு முன்பு கொள்முதல் செய்தது இல்லை.

ரூ.5 கோடி மதிப்பில் கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பில் 10 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு உலர் கலத்துடன்கூடிய நிரந்தரக் கட்டிடம் கட்டப்படும். கடந்த காலங்களில் நாளொன்றுக்கு ஒரு நிலையத்தில் 800 நெல் மூட்டைகள்தான் கொள்முதல் செய்ய முடியும். ஆனால், தற்போது நாளொன்றுக்கு 1,000 மூட்டைகள் வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்டுள்ள ஈரப்பத அளவான 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக தளர்வு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அந்தக் கோரிக்கை நிறைவேறும்.

கரோனா நிவாரணமாக ரேஷன் கடைகளில் கூடுதலாக அரிசி வழங்குவதை டிசம்பர் மாதத்துக்குப் பிறகும் நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மழையால் ஏற்பட்ட பாதிப்பால்தான் வெங்காயம் விலை உயர்ந்துஉள்ளது. இந்த விலை உயர்வை அரசு கவனித்து வருகிறது. ஒருவேளை விலை உயர்வு தொடர்ந்து நீடிக்குமேயானால் முதல்வரின் அனுமதியோடு ரேஷன் கடைகளில் வெங்காயம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT