காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு இருப்பவர்கள் கடைகளுக்கு செல்ல வேண்டாம் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரோனா தொற்றுகால கட்டத்தில் கரோனா அல்லாத சேவைகளும் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனைகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. கரோனா தொற்று எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பொதுமக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்வதே இறப்பு எண்ணிக்கைகுறைய முக்கிய காரணமாகஉள்ளது. தமிழக மருத்துவத் துறையின் தரத்தை அறிந்தே ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்து பலர் தமிழகம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பண்டிகைக் காலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைகள் மற்றும் வணிகவளா
கங்களில் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.
காய்கறி சந்தைகளில் சமூகஇடைவெளியின்றி மக்கள் நடமாடுவதைக் காண முடிகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க மாவட்டவாரியாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு இருப்பவர்கள் கடைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் வேண்டும். இது பண்டிகைக்காலம் என்பதற்காக பரிசோதனைகள் செய்வதை பொதுமக்கள் தாமதம் செய்ய வேண்டாம். அரசு பரிசோதனை மையங்களில் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.
தனியார் பரிசோதனை மையங்களில் அரசுநிர்ணயித்த தொகையைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசால் அகிலஇந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை தமிழக முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இவ்வாறு தெரிவித்தார்.