அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் (42) உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் வெள்ளைகேட் அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குப்பன் - நங்கை தம்பதியரின் மகன் ஏகாம்பரம். இவர் கடந்த 2000-ம் ஆண்டு ராணுவப் பணியில் சேர்ந்தார். இவருக்கு குமாரி என்ற மனைவியும், ஆதித்யா, ஜெனி ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் இன்னும் 6 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வுபெற உள்ளார்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் பணியில் இருந்த ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்தவிபத்தில் வேனில் இருந்தஏகாம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது உடல் சொந்தஊரான செம்பரம்பாக்கத்துக்கு இன்று கொண்டு வரப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ராணுவ வீரர் ஏகாம்பரத்தின் மறைவு செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் செம்பரம்பாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கிஉள்ளது.